Thursday, 2 May 2024

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

 








கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்...

----------------------------------------------------------------------------
அன்புள்ள உனக்கு

என் காதலை, நம் காதலாக்கக் கூடிய நீ எங்கே இருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது. ஒரு வேளை இந்த கடிதம் உன்னை எனக்கு கண்டுபிடித்துத் தரலாம். இது இணையத்தில் எழுதப்படுகிறது. என்னுள் இட்டு நிரப்ப முடியாத வெறுமையை, நீ என்னை நேசிக்கும் போது மாத்திரமே நிரப்ப முடியும் என்று நம்புகிறேன்.

நீ ஏன் என்னை காதலிக்கவில்லை, காதல் என்பது என்னவென்று தெரிந்தால் மாத்திரம் தானே, காதலித்தாயா இல்லையா? என்பதை நான் அறிவேன். சமூகவிதிகளை எல்லாம் கடந்து நீ என்னை காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். திருமண விதிகளுக்கு அப்பாற்பட்டவள் நான். கூனியாகவும், சூம்பிபோன கால்களை உடையவளாகவும் இருக்கிறேன். எனக்குள் அதினதின் பருவத்தில் அதினதின் உணர்வுகள் எழுந்தது. காதலும்.. விதிவிலக்கில்லாமல் காதலனைத் தேடியது. சராசரி மனமுடையவள் தான்.. சராசரி உடல்வடிவு கொண்டவள் அல்ல. நிறைய நிராகரிப்புகள். எனக்கேற்பட்ட நிராகரிப்புகளை சொல்லும் போது நீ என்னை காதலால் முத்தமிடும் துணிவுடையவனாகவும், என் கூன் முதுகை தடவி காதலை உறுதிப்படுத்துபவனாகவும் நீ இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன். வயோதிகத்தின் தளர்ந்த மார்பகங்கள் என் மீது உனக்கு எந்த நாட்டத்தையும் உண்டாக்காது போய்விடுமோ என்று கூட எண்ணி அழுதிருக்கிறேன். நீ என்னை தொட அருவெறுப்பு அடைவாயோவென்று தவித்து அப்படி ஒருவன் என் வாழ்வில் வேண்டவே வேண்டாம் என்று எண்ணியது உண்டு. காதல் உடல் சார்ந்தது என்று நிராகரித்த அத்தனையரும் கூறினார்கள். என் மன உணர்வுகளின் மென்மையும் மேன்மையும் கருகிபோனதைப் பற்றி அவர்களுக்கு எந்த பொறுப்புணர்வும் இல்லை. நான் நேரில் பார்க்கும் போது அதை கூறி ஒரு மூச்சு அழுது ஆறுதல் தேடிக்கொள்கிறேன். நீ என் உடல் நுகர்ந்து மனம் தீண்டாதவனாக வராது, என் மனம் புசித்து என்னை நானே உனக்கு படையலாக்கும் துணிபை தூண்டுபவனாக வா.

கைகோர்த்து நடப்பவர்களை பார்க்கும் போதெல்லாம் நம் விரல்களும் பின்ன வேண்டும் என்று தான் ஆசை. சின்ன சின்ன கதைகள் பெருங்கதைகளாகி, நேரம் கடப்பதே தெரியாத நாட்கள் வரவேண்டும் என்பதும். காதலிக்கத் தெரியாத என்னை நீ காதலில் மூழ்கடித்து, காதல் இதுவென்று பாடம் புகட்ட வேண்டும் என்றும் தோன்றுவதுண்டு.

பறவைகளை பார்க்கும் போதும், மேகங்கள் நகர்தலை பார்க்கும் போதும் உன்னை எண்ணிக்கொள்வேன். வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை பார்க்கும் போதும், அழகாய் பூத்து படர்ந்திருக்கும் காட்டு மரங்களை பார்க்கும் போதும், குரங்குகளின் சேட்டையிலும், நாய்களின் தாய்மையிலும், கோழி தன் குஞ்சை ரெக்கைக்குள் அணைத்துத் தரும் பாதுகாப்பிலும், நீ அப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அணில்கள் ஓடும் போது, இந்த அண்டசராசரத்தையும் படைத்தவனே நீ ஏன் எனக்கு காதலனாக வரகூடாது என்றும் தான் தாகம் கொள்கிறது என் ஆன்மா..
எத்தனை பேராசைக்காரி நான், உன்னையே காதலனாக எதிர்பார்க்கும் ஆசை. உன்னிடம் தான் கேட்கவும் உரிமை இருக்கிறது.. மனிதனாக வா என்னை காதலிக்க, மனிதன் மனுஷியிடம் எதிர்பார்க்கும் உருவ அழகெனும் ஈர்ப்பின் எதிர்பார்ப்போடு வராதே.. என்னை காதலி, என்னை நேசி, எனக்குள் அன்பை விதை, ஆன்மாவை தழுவு... என் வெறுமையை காதலெனும் தீயால் பொசுக்கி எரி. என்னோடு உறவாடு, எனக்காக நேரம் கொடு.

ஒவ்வொரு உயிரினத்திலும், உன் உருவம் காண்கிறேன். அதில் மகிழ்ந்து போகிறேன். இன்னும் அதிக அதிகமான எதிர்பார்ப்பும் கூட காதலெனும் பெரும் வேள்வித் தீயை கடக்க வேண்டுமென எனக்குள் எழும் அந்த தீரா தாகத்தை தீர்க்க இயற்கை பேரருளே, என் காதல் மனம் புரிந்து என் எனக்கு காதல் கொடுக்கும் காதலனாக வா அப்போழுது என் காதல் நம் காதல் ஆகும். அந்த காதலில் கசிந்து போகும் என் வெறுமை.
இப்படி நீ ஏதும் செய்யாத பொழுதிலும், உன்னை காதலிக்கிறேன். உன் இயக்கத்திற்குள் என்னை நினைவு கூர, அல்லது நினைவு கூர்ந்தாலும், உனக்கு நேரம் இல்லாது போகலாம். நேரம் இருக்கும் போது பேசுபவனாக அல்ல, நேரத்தை ஒதுக்கி என்னை தேடுபவனாக வா!

நித்தம் காத்திருக்கிறேன் உனக்காக
காதலுடன்

எழுதுகிறேன் ஒரு கடிதம் கடிதப் போட்டி - சீசன் 6



அன்புள்ள உனக்கு,

உனக்கு எழுதுவதா? அல்லது எனக்கு நானே எழுதிக்கொள்வதா என்று தெரியவில்லை.. எந்த உனக்கு எழுதுவது? என்னில் இருக்கும் உனக்கா? இல்லை நானே வரைந்த ஓவியமான உன்னை வெளியில் தேடி எதார்த்தத்தில் வர ஏங்குகிறேனே.. அந்த எதார்த்தப் புருஷனான உனக்கா?

முன்பொரு முறை நடிக்கவாவது நீ வேண்டும் என்று எழுதியிருந்தேன். ப்ச்... அந்த நாடகக் காதலெல்லாம் வேண்டாம். உண்மையாய்.. முழு பேரன்பைத் தரக்கூடிய நீ எங்கே இருக்கிறாய்? நான் பெண்ணாக இருப்பதால் ஒரு ஆணாகத்தான் உன்னை எதிர்பார்க்கிறேன். எதிர்பாலினம் தானே ஈர்க்கும். நிஜமான காதலைக் கொடுக்கக் கூடியவனாக வா.

காதல் என்பது காத்தல் தானே... நானும் கூட ஒரு அரவணைப்பையும் பாதுகாப்பையும் தான் தேடுகிறேன்.

என் ப்ரியமே..

எது தப்பு, எது சரி என்பதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. நான் ஒரு சிறுவனுக்கு ஆசிரியை முன்பு சைக்கிளில் அமர்ந்தபடி பேசுவது தவறு என்று கற்பித்தேன்.
ஆனால் அதே நான், அதே ஆசிரியை முன்பு என் வீகோவில் அமர்ந்து மழையில் நனைந்தபடி பேசுகிறேன். நான் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரவில்லையா, இந்த இடத்தில் நான் ஒரு சங்கதியைத் தெரிவிக்கிறேன். நான் ஒரு மாற்றுத் திறனாளி என்னால் அதிக நேரம் நிற்க முடியாது.
மாற்றுத்திறன் தகுதியா என்ன? அதிகத்திற்கும் அதிகமான விதிவிலக்குகளைப் பெற...

எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. என் இலக்குகள் பெரியதாக இருக்கிறது. அதற்கேற்ற போதுமான திறமை அற்றவளாக இருக்கிறேன். நான் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனென்றால் நான் நிர்வாகத் திறன் உடையவளாக மாற விரும்புகிறேன். தொழில் நிறுவனங்களையும், சேவை நிறுவனங்களையும், மாநிலத்தையும், நாட்டையும் சரியானபடி நிர்வகிக்கும் திறமை உடையவளாக விரும்புகிறேன். இது விருப்பம் தான்...

வெறும் விருப்பங்கள் மாத்திரம் நடைமுறைகளை சாத்தியமாக்குவது இல்லை. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம் தேவை.
என்னிடத்தில் நிறைய குறைகள் இருக்கிறது. நான் நாய்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள், ஓணான்கள், பல்லிகள், குரங்குகள், கோட்டான்கள் என்று என்று எந்த உயிரினத்திற்கு ஆபத்து என்றாலும் கதறி அழுகிறேன். அதே நான் தான் கவனமின்றி இறைச்சி உண்கிறேன்.

நான் நிலத்திற்கு வீகோவில் போகும் போது, திடீரென ஓணான் ஒன்று குறுக்க்காக வந்துவிட்டது. நான் அதை கொல்லும் நோக்கத்தில் என் வாகனத்தை இயக்கவில்லை. என் வாகனத்தின் சக்கரம் ஏறி அந்த ஓணான் இறந்துவிட்டது. எனக்கு உயிர் போகும் வலி ஏற்பட்டது. சட்டென்று இறங்கி அந்த ஓணானை கையில் எடுத்து கதற மனம் தவித்தது. என் இயலாமை... என்னால் அப்படி செய்ய முடியவில்லை. நான் நிலத்திற்கு போய் திரும்பும்போது... இறந்த ஓணானைச் சுற்று மூன்று ஓணான்கள் இருந்தது. என் இதயம் வெடித்துவிடும் போல் துக்கம் கொண்டது. நான் இன்னும் அதிக துயரத்திற்கு ஆட்பட்டேன். ஓணானே என்னை மன்னித்துவிடு... உன் குடும்பத் துயரத்திற்கு நான் காரணமானேன். என்று புலம்பினேன்.

அறிவு கூறுகிறது அது தற்செயல் என்று... மனதிற்கு அது புரிவதில்லை. நான் நாய்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் பெற்றெடுத்த குழந்தைகள் போல... சமீபத்தில் டோட்டோ பார்வோ வைரசால் இறந்து போனான். நான் அவனை வளர்த்தெடுப்பேன் என்று தான் சாலையில் இருந்து எடுத்தேன். அவன் இறந்து போனது எனக்கு மன வேதனைத் தருகிறது.
சரி அதையெல்லாம் விடு......

நான் என் வாழ்க்கையை நாய்களுக்காக கொடுக்க முடிவெடுத்து உள்ளேன். நீயும் நாய்களை நேசிப்பவனாக இருந்தால், நம் இருவருக்குமான இந்த வாழ்க்கைப் பயணம் அர்த்தப்படும் தானே.. என் வாழ்க்கை நாவலில் வருகிற எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு அத்தியாயம் என்றால், எல்லா அத்தியாத்திலும் நாய்கள் என்னோடு பயணித்திருக்கும். இப்பொழுதும் பயணிக்கிறது. எனக்கு அன்பு வேண்டும். அதுவும் பேரன்பு. இருக்கிற மிச்ச சொச்சக் காலங்களிலெல்லாம் எனக்கானதான முழுமையான அன்பு. இன்னும் எழுத அநேக விஷயங்கள் இருக்கிறது. நேரில் வா... கைக்கோர்த்தபடி பேசித் தீர்ப்போம்.

உன் வருகைக்கான காத்திருப்பில்....


பேர்

Friday, 26 April 2024

காத்திருக்கிறேன்

 என்னை அழைத்துக்கொண்டு போ

ஒரு தூரதேசம்

இந்த கவலைகள் எதுவும்

என்னை தீண்டாமல்

அடைக்காத்துக்கொள்


இந்த துயர்

தாங்கொண்ணா வலியை கொடுக்கிறது

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வலை

தகர்த்து எறிய கூடாததாக


வா...


வந்துவிடு


நான் மரணிக்கும் முன்பாவது...


காத்திருக்கிறேன் நித்தமும் உனக்காக.

Monday, 15 April 2024

காதலை சந்தித்தேன்

 அன்புள்ள உனக்கு...


நான் உன்னை காதலிக்கிறேன். இதை உன்னிடத்தில் சொல்ல வெட்கப்படுகிறேன்.  ஒவ்வொரு முறை நிராகரிப்பிலும்... அய்யோ இது காதலில்லையே என உணர்ந்து அழுதிருக்கிறேன். இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சுருங்கியிருக்கிறேன். 


இன்று 


காதலை சந்தித்துவிட்டேனே என்று அழுது நின்றேன். ஒரு சிறுமி என்னை கேலி செய்யும் அளவிற்கு. நான் அழுதிருக்கிறேன்.

என்ன செய்ய!

நான் வாங்கி வந்த வரம் அப்படி... இதை உன்னிடம் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் சொல்லி நீ ஏற்காதே போகும் இன்னொரு வலியை தாங்க எனக்கு திறன் இல்லை.

என்றும் உன் நினைவாக...

உன்னவள்

காதல் என்பது

 




காதல் கள் தான்

சடுதியில்

மயக்கத்தில் ஆழ்த்தியது


சிந்திக்க விடாமல்

மனதை அழுத்தியது

பெருந்துயர் வந்து 

ஆட்கொண்டு


பேசாதே போவாயோவென

பயமுறுத்தியது

இத்தனை 

பயமுறுத்தல்களும்

உன்னிடத்தில் இருந்து வந்த

அந்த

Hi - யில் முடிவடைந்தது...


பயத்தை புறந்தள்ளி

மீண்டும் காதலிக்கத் துவங்கிவிட்டேன்

காதலின் வலி உணர்ந்தவன்

இன்னொருத்தியை வலிக்கச் செய்வாயா?

என்ன!


ஒருவேளை

உன் காதல் என் மீது

அபிஷேகிக்கப்படாமல்

போனாலும் கூட


நான் காதலிக்கிறேன்

உன்னை...

என்னுள் இது எத்தனையாவது என்று

தெரியவில்லை...


முன்பெப்போதும்

நெஞ்சுக்கூடு 

சிதறிப்போவதான உணர்வு

ஏற்பட்டதே இல்லை..


வலி

நிராகரிப்பு

பிரிதல்

ப்ளாக் செய்தல்

எல்லாம் வழமை தான்...


இன்றுணர்ந்த வலி

புதிதாகவே

பூத்த மலர் இன்று....

உன் கடைசி காதலி

 



காதல் என்றாலே

மறைத்தலும் ஒட்டிக்கொள்கிறது

உள்ளத்தில்...


எல்லா காதலும்

ஆழத்தில் வலி

இழப்பில்

உயிர் கொல்லும் வலி


காதலை விட

நட்பு தான்

என்னை கொன்று குவித்தது

எங்கிலும்


காதல் கைவரவே

இல்லையே...

எப்பொழுது வருவாய் நீ..


உனக்கு எத்தனை காதல்களும்

இருக்கட்டும்

உன் கடைசி காதலியாக

நான் இருந்தால் போதும்..


அடுத்தொன்று தேடி

நீ எனை பிரிந்து போவதை தாங்க

எனக்குள் ஆற்றல் இல்லை


இப்பொழுதெல்லாம்

என் வாழ்தலுக்கே

நீ தான் ஆற்றலாகிறாய்...

நீயே இல்லாது போனால்?

மகிழ்ச்சியை கொடு

நீ அனுப்பாத 
குறுஞ்செய்திக்காக
இன்று அழுதேன்

ஏன் வலிகளை
தின்னக் கொடுத்தாய்
போதும்...

நிரம்ப
மகிழ்ச்சியை 
கொடு
வாழ்ந்துவிட்டு போகிறேன்

உன் நினைவுகளால்
ஏனும்...


எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...